என்னுடைய கல்லூரிகாலம் முதல் இப்பொழுது வரை நல்ல நண்பனாக இருந்து வரும் அந்த ஜகூபா.இவனுடைய காதல் என்னைக் காயப்படுத்திய காதலும் கூட. இந்தக்காதல்தான் என்னை கவிஞனாக்கியது.

பாளையங்கோட்டை கல்லூரியில், பிஎஸ்ஸி கணிதம் படித்துக்கொண்டிருந்தபொழுது இன்னொரு பிரிவைச்சார்ந்த அமி என்ற பெண்ணின் மீது அவனுடைய காதல் வகுப்புத் தோழிகளின் ஆதரவுகளோடு அமோகமாக வளர்ந்தது.

முதலில் அந்தப் பெண்ணின் பெயரை காதலிக்க ஆரம்பித்தான். பின் அவள் உயிரைக் காதலிக்க ஆரம்பித்து விட்டான்.அவளின் பிறந்தநாளுக்கு கவிதைகள் வாழ்த்து அட்டைகள் ரோஜாப்பூக்கள் என களை கட்டியது.


- காதல்
வாழ்த்து அட்டை வியாபாரியை..
வாழ வைக்கிறது!
ரோஜாப்பூக்களை..
குடிசைத்தொழிலாக்குகிறது!


அந்தப்பெண்ணனின் வீட்டிற்கு சென்று அவளது தாயாரின் கருணையையும் மதிப்பையும் பெற்று சுமுகமாய் வளர்ந்த அந்தக்காதல் கடைசியில் அந்தப்பெண்ணிற்கு வெளிநாட்டில் இருக்கும் மாப்பிள்ளையின் வடிவில் வந்தது அவர்களது காதலின் எதிரி.


"நீ நாங்கள் சொல்கிற மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ளவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வோம் " என்று அவர்களது பெற்றோர் மிரட்டினார்களா என்று தெரியவில்லை ஆனால் அந்தப்பெண் கடைசியில் மனசு மாறிவிட்டாள்.

நாங்களும் கடைசி வரை போராடினோம் . அந்தப்பெண்ணின் உறவினர் ஒருவரிடம் அந்தப்பெண்ணிற்கு விருப்பம் இல்லை வீட்டில் உள்ளவர்கள்தான் கட்டாயப்படுத்துகிறார்கள் என்று நிலைமையை விளக்கி அந்த உறவினரையும் அழைத்துச் சென்று எல்லோர் முன்னிலையிலும் கேட்கும் பொழுது
"அவனை நான் காதலிக்கவே இல்லை ச்சும்மா ப்ரண்ட்சிப்தான்" என்று சொல்லிவிட்டாள்.
அந்தக்கடுப்பில்தான் நான் எழுதினேன் ஒரு கவிதை..

காதல் யாரையும் ஏமாற்றுவதில்லை
ஆனால்
காதலிகள்தான்.
.


அதன் பிறகுதான் உணர்ந்தேன். அவனது காதலி அவனை ஏமாற்றிவிட்டதற்காக எல்லோரையும் நாம் குறைகூறக் கூடாது என்று. எத்தனையோ காதலர்கள் காதலித்து பெண்களை ஏமாற்றிவிட காதலிகள் - காதலன் வீட்டுமுன் போராட்டம் என்று எத்துணை செய்திகளில் படித்திருக்கின்றோம்

கடைசியில் எனது நண்பன் எனக்கு ஒரு கடிதமும் தனது காதலிக்கு கொடுத்து விடவேண்டும் என்று ஒரு கடிதமும் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்ய முயன்று தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டான். நல்லவேளை அவனது தாய் உடனே கவனித்து விட்டதால் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றி விட்டார்கள்.

தற்கொலையைப்போல
இழிவான செயல் எதுவுமில்லை
ஆகவே
காதலிக்காதீர்கள்


பின்னர் தந்தையின் சுடுசொற்களுக்கு இடையேயும் சமுதாயத்தின் பழிசொற்களுக்குpடையேயும் தடுமாறி போராடி வெற்றி பெற்று தற்பொழுது சென்னையில் வெப் டிசைனராக பணிபுரிந்து கொண்டிருக்கின்றான். உலக நாடுகளிலிருக்கும் பல நிறுவனங்களுக்கு Freelancer webdesigner - ஆக பணிபுரிந்து கொண்டிருக்கின்றான்.

என்னால் இன்னமும் மறக்கமுடியாது என்னிடம் அவன் இப்படி புலம்பியதை :

"டேய் அவ இப்பவும் விதவையாய் வந்தால் கூட நான் ஏற்றுக்கொள்வேன்டா.."

'பாருங்க..எந்த அளவுக்கு அந்தப் பெண்ணை காதலித்திருப்பான் அவன்.? ஆனால் இப்படி ஏமாத்திட்டுப் போயிட்டாளே அவள்..'

அதுவும் நல்லதுக்குத்தான். இறைவன் ஒரு சோகத்தை கொடுத்து கெட்டவர்களையும் நல்லவர்களையும் எனது நண்பனுக்கு அடையாளம் காட்டிவிட்டான்.

காதலிக்கு கல்யாணம்
இவன்
காதல் விதவையானது


எனது நண்பன் ஜகூபாவுக்கு இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது. என்ன ஒரு ஆச்சர்யமென்றால் எந்தப் பெயரை விரும்பி அந்தப்பெண்ணைக் காதலித்தானோ அதே பெயருள்ள பெண்ணே இவனுக்கு மனைவியாக அமையப்போகின்றாள்.

செங்கோட்டையைப் பூர்வீகமாக கொண்ட சிங்கப்பூரில் செட்டிலான ஒரு குடும்பத்தில் இருந்து அவன் விரும்பிய பெயர் கொண்டவளே உயிர் நிரப்ப வரப்போகிறாள். இப்போது அவளோடு இணையத்தில் இதயத்தை தொலைத்துக்கொண்டிருக்கின்றான்.

ஆனால் நான் இன்னமும் எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். எவ்வளவு தீவிரமாய் எனது நண்பனைக் காதலித்த அந்தப்பெண் கடைசி நேரத்தில் மனம் மாறிய காரணம் என்ன..? பலவந்தமா இல்லை பணபந்தமா?

பெயரைக் காதலித்து - அவளின்
உயிரைக் காதலித்தான்
அவளோ
பெயருக்கு காதலித்துவிட்டு
உயிரைப் பறிக்க நினைத்தாள்.


- ரசிகவ் ஞானியார்

(பட உதவி : LakshmanaRaja )





ஆப்டெக் படிக்கும்பொழுது மருதகுளம் என்ற ஊரில் இருந்து படிக்க வந்த அகிலன் என்பவன் எனது ஊரில் இருந்து படிக்க வந்த வந்த ரீனா என்ற இந்திக்காரப் பொண்ணின் மீது லேசாக காதல் வiலையை வீசினாhன். அவளைப்பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருப்பான். அந்த இந்திக்காரப் பெண்ணிற்கு தமிழ் சுத்தமாக தெரியாது என்பதால் நாங்கள் அந்தப்பெண் பக்கத்தில் வரும்பொழுது ஏதாவது பேசி கிண்டலடிப்போம்.


ஒரு நாள் நானும் அகிலனும் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கும் பொழுது அந்த ரீனாப்பொண்ணும் தண்ணீர் குடிக்க வந்தாள்.
"டேய் என்னடா பையா ..ஆள் சூப்பரா இருக்கே..? உங்கப்பன் என்ன பண்றான்டா..?" என்று அந்தப்பெண்ணை பார்த்து கேட்க..

அவளோ.."வாட்..வாட்.." என்று திணறி உளறி பின் சென்றுவிட்டாள்.

அரைமணிநேரம் கழித்து ஆப்டெக்கின் மேலாளர் எங்களை அழைத்து கண்டித்தார்.
"இந்தப் பாருங்க அந்தப்பொண்ணு பெரிய இடம். கிண்டல் பண்ணாதீங்க..அப்புறம் பிரச்சனையாயிடுச்சுன்னா எனக்குத் தெரியாதுப்பா சொல்லிட்டேன்..."
என்று நாசூக்காக கண்டித்தார்.

அதன்பிறகு அந்த ரீனாவை நாங்கள் கிண்டலடிப்பதைக் குறைத்துக்கொண்டோம். அகிலனும் ரீனாவும் எதிரெதிரே கடக்கும்போது முறைப்பதோடு சரி. மோதலில்தான் காதல் ஆரம்பிக்கும் என்று சொல்வர்கள். ஆனால் அகிலனுக்கும் ரீனாவுக்கும் இடையில் எதுவுமே நடக்கவில்லை. அவளும் கோர்ஸை பாதியிலேயே விட்டுவிட்டு கிளம்பிவிட்டாள்.

அந்த அகிலன் தற்பொழுது சென்னையில் பணிபுரிந்து கொண்டிருப்பதாக கேள்விப்பட்டு ஒருமுறை சென்று பார்த்தேன். அதன்பிறகு அவனைப்பற்றிய தகவலே இல்லை.

ஆனால் அவன் அவள் மீது வைத்தது காதல் அல்ல. அவளின் உடை நடை அழகு கண்டு உணர்ச்சிவசப்பட்டுப்போன ஒரு இனக்கவர்ச்சிக் காதல்தான்.

மருதகுளப் பையனின்
இதயக்குளத்தில்
கல்லெறிந்தது காதல்!

ரீனா மீது வைத்த காதல்
வீணாகிப் போனதப்பா


- ரசிகவ் ஞானியார்

ஏஞ்சலுக்கு ஒரு அஞ்சல்

Angel

( இந்தக் கவிதை எம்சிஏ படிக்கும்பொழுதுஎன்னுடைய ஜுனியர் மாணவனுக்காக நான் எழுதிக் கொடுத்த காதல் புலம்பல். )
ஏஞ்சலுக்கு ஒரு
ஏழையின் அஞ்சல்
இதோ

என் இதயமூலையில்
ஊஞ்சல்கட்டி ஆடுபவளே
ஏஞ்சலே

என்
பேனாவின் அழுத்தத்தில்
உன்னிதயம் …
உடைந்துவிடக்கூடாது என்றுதான்
உனக்கு எழுதும்
அஞ்சல்கள் எல்லாம்
வெற்றுத்தாளாகவே வருகிறது

உன்னைப்பற்றி எழுத
கவிதைகளைத் தேடினேன்
போடி!
எந்தக்கவிதையும்
உன் பெயரைவிடவும்
அழகாகயில்லை’

நீதானே நடந்துசெல்கிறாய்
அது எப்படி?
உன் நிழல்
என் இதயத்தில்’

போதும் எனக்கு
அதுமட்டும் போதும்’
எதிரெதிரெ வரும்போது
தலைதாழ்த்துவாயே அந்த
வெட்கம் போதுமடி’

என்னைத்
தாண்டிசென்ற பிறகும்
தலைதிருப்பி பார்ப்பாயே அந்த
பார்வை போதுமடி’

உனக்கு பின்னால்
நான்
நடந்துகொண்டே வரவேண்டும் நீ
நரகத்திற்கு சென்றாலும்!

உனக்கு
கடிதம் எழுதி எழுதி
கிழித்தும் போட்டதில்
அடிக்கடி பிரசவமாகிறது…
அடியேன் வீட்டு குப்பைத்தொட்டி!

அழகிப்போட்டியில் நீ
கலந்துகொள்ளாததால்..
ஐஸ்வர்யா ராய் தப்பித்தாள்!

உன்னைப் பார்ப்பதற்காக
துடித்துக்கொண்டிருக்கும் என்
இதய ஓட்டத்திற்கு முன்னால்
பி.டி. உஷா கூட
பிச்சை எடுக்கவேண்டும்

சி (C) மொழி
ஜாவா (C++) மொழி
தெரிந்தாலும்,
தெரியாமல் போனதே..
உன் மௌன மொழி?

நீ
ஜன்னலைத்திறந்தால் நான்
வாசலில் நிற்கிறேன்!
நீ
ஜன்னலை மூடினால் உன்
இதயத்தில் நிற்கிறேன்!

ஓரே ஒருமுறை சிரி
எனக்கு வானவில்லை பார்க்க
ஆசையாகயிருக்கிறது

மேயரை…
மக்கள் தேர்ந்தெடுக்கலாம்!
ஆனால் ஏஞ்சலே!
என்
மனசுக்கு நீதாண்டி
மேயர்!
என்
கண்ணுக்கு நீதாண்டி..
கவுன்சிலர்!

எனக்கு தேசப்பற்று அதிகம்
ஆம்
உன்
சுடிதாரைகண்டுதான் நான்
சுதந்திரதினமே கொண்டாடுகிறேன்!

வருடத்திற்கொருமுறைதான்
நீ
பிறந்தநாள் கொண்டாடுகிறாயோ?
அதை
மாதமொருமுறை
மாற்றிக்கொள்வாயா?
நான் அடிக்கடி
வாழ்த்துஅட்டை அனுப்பவேண்டும்

உனக்கு
வாழ்த்துஅட்டை
அனுப்புவதற்காகவாவது
ஏதாவது பண்டிகைகள்…
வந்துகொண்டேயிருக்கவேண்டும்

மதச்சார்பான
பண்டிகைகள் எல்லாம் நம்
காதலுக்கு
குறுக்கே நிற்பதில்லை

உன்விழியும்
என்விழியும்
மோதித் தெறிக்கின்ற
மத்தாப்பு நிமிடமெல்லாம்
எனக்குத் தீபாவளிதான்

உனைக்கண்டபிறகுதான்
என் கண்கள்
நோன்பை முறித்துக்கொள்கிறது
ஆகவே உன்னை
ரசிக்கும் நிமிடமெல்லாம் எனக்கு
ரம்சான்தான்

உன்
ஆசிர்வாதம் தேடி
அலைந்துகொண்டிருக்கும் எனக்கு
உன்
கிருபைகிடைக்கின்ற எல்லாநாளுமே
கிறிஸ்துமஸ்தான்

ஆகவே
எதிர்பார்த்துக் கொண்டேயிரு
எல்லா பண்டிகைக்கும்
வாழ்த்து வரும்

திருமணத்தை
சொர்க்கத்தில் நிச்சயிக்கின்ற கடவுள்.
நம் காதலை மட்டும்
இக்கல்லூரியில் நிச்சயிக்கட்டும்!

- ரசிகவ் ஞானியார்

பந்தல் குழிக்குள் காதல்

school lovers

எனக்கு ஞாபகம் தெரிந்த அடுத்த காதல் ஜோடி வீரபத்ரன் - ஆர்த்தி

வீரபத்ரன் என்னுடைய பத்தாவது வகுப்பு பள்ளித்தோழன். தினமும் நான் - வீரபத்ரன் - பாலகுமார் - ராஜா என்று பள்ளி முடிந்ததும் ஒன்றாக சைக்கிளையும், விழிகளையும், தாவணித்தேவதைகளை பின்தொடர்ந்து உருட்டியபடி பேசிக்கொண்டே வந்து கொண்டிருப்போம்.

வீரபத்ரன் - விஜயகாந்தின் நிறத்தில் ஆறடி உயரத்தில் இருப்பான். அவனது தந்தை திருமண வீட்டிற்கு பந்தல் கட்டும் வேலை செய்து வருபவர்.

ராஜா - எனக்குத்தெரிந்து பாளையங்கோட்டையிலிருந்து எங்கள் ஊருக்கு படிக்க வந்த முதல் மாணவன். அவனது தந்தை அரசாங்க அலுவலகர்

பாலகுமார் - புளியங்குடி பக்கத்தில் இருந்து வந்து எங்கள் ஊரில் அவனது உறவினர் வீட்டின் மாடியில் தங்கிப் படிப்பவன். அந்த வீட்டின் எதிர்வீடுதான் ஆர்த்தியின் வீடு. அவளும் எங்கள் பள்ளியில்தான் படிக்கின்றாள்

தினமும் பள்ளி முடிந்து நடந்து வரும்பொழுது ஆர்த்தி தனது சக தோழிகளுடன் எங்களின் பேச்சுக்கள் எட்டும் தூரத்தில் நடந்து சென்று கொண்டிருப்பாள். எப்படித்தான் லவ் பத்திக்சோ தெரியாதுங்க..அப்பல்லாம் எனக்கு விவரம் தெரியாத வயசு..அட நம்புங்க..உண்மைதான்.. :)

அடிக்கடி வீரபத்ரனும் ஆர்த்தியும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொள்வது, தூரத்தில் சென்ற பிறகு கைகாட்டிவிட்டு விடைபெறுவது, இதெல்லாம் காதல்தான்னு எனக்கு அன்னிக்கே தெரியாதுங்க..

ஆனால் பாலகுமாரனும், வீரபத்ரனும் ஒருவருக்கொருவர் எங்களை விட்டுவிட்டு ரகசியம் பேசிக்கொள்வார்கள். வீரபத்ரன் அடிக்கடி பாலகுமாரைப் பார்க்க அவன் தங்கியிருக்கும் வீட்டிற்குச் செல்வான். “ஏன்னா எதிர்வீட்டுலதானே அவனோட தேவதை தங்கியிருக்கு”

ராஜா கூட என்னிடம் சந்தேகமாய் கேட்பான். “ஞானி என்னடா வீரபத்ரனும் பாலகுமாரனும் ஏதோ இரகசியமா பேசிக்கிறாங்கடா..என்னன்னு தெரியல..”

ராஜா கொஞ்சம் உஷார் பார்ட்டி. கண்டுபிடித்து என்னிடம் சொல்லிவிட்டான். “டேய் ஞானி! வீரபத்ரனும் ஆர்த்தியும் லவ் பண்றாங்கடா..”

எனக்கு பயங்கர ஷாக். ராஜா என்னிடம் அந்த விசயத்தை சொன்ன பிறகு காதல் என்ன நிறம்..? எப்படியிருக்கும்..? அது வந்தால் என்ன ஆகும்..? எப்படி வருகிறது? என்பதை எல்லாம் 2 நாட்கள் தூக்கத்தை தொலைத்து அலசியிருக்கின்றேன்.

நெருங்கியவர்கள் மரணமடையும்பொழுது நமக்கும் மரணம் உண்டு என்று ஒரு பயம் வருமே அதுபோல நெருங்கிய நண்பனின் காதல் என்னையும் கிளர்ச்சியடையச்செய்தது மட்டுமின்றி காதல் பற்றிய முதல் அறிமுகத்தையும் தந்தது.

எனக்கு வீரபத்ரனிடம் கேட்பதற்கு தயக்கம். ஆகவே பாலகுமார் வீட்டிற்குத் தேடிச்சென்று விசயத்தை கேட்டேன். அவன் முதலில் பயத்தில் மறுத்தான் பின் உண்மையை உளறிவிட்டான்.

மறுநாள் வழக்கம்போல நாங்கள் பள்ளி முடிந்து வந்துகொண்டிருக்கின்றோம். எனக்கு அப்பொழுது வீரபத்ரனும் ஆர்த்தியும் மட்டுமே தனியாய்த் தெரிந்தார்கள். சினிமாவின் கதாநாயகர்கள் கதாநாயகிகள் எல்லாம் ஞாபகத்தில் வந்து போயினர்

காதலித்துப்பார்
பார்க்கும் படத்திலெல்லாம்
நீயே கதாநாயகன்
அவளே கதாநாயகி
அவள் தந்தையே வில்லன்

பத்தாம் வகுப்பு இறுதிப்பரிட்சை நெருங்கியது. தமிழ் பரிட்சை அன்று காலையில் பள்ளிக்கு வரும்பொழுதே அந்த அதிர்ச்சியான தகவல் வந்து சேர்ந்தது.ம் அதான்ங்க..நம்ம வீரபத்ரன் இருக்கான்ல..அவன் ஆர்த்தியை கூட்டிட்டு ஓடிப்போய்ட்டான்பா..எனக்கு ஆச்சரியமாகவும் பயமாகவும் இருந்தது. எந்த நம்பிக்கையில் அவர்கள் ஓடிப்போயினார்கள் என்ற ஆச்சரியமும் வீரபத்ரன் ஓடிப்போன செய்தியைப்பற்றி நம்மிடம் விசாரிப்பார்களோ என்ற பயமும் அதிகமாகியது.

நல்லவேளை அவர்கள் ஓடிப்போன செய்தியைப்பற்றி பாலகுமார் பள்ளி நிர்வாகத்திடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் சொல்லிவிட்டதால் நான் தப்பித்தேன்.

பிறகு இரண்டு நாள் கழித்து அவர்கள் தூத்துக்குடியில் அகப்பட்டுக்கொண்டார்கள்.

வீரபத்ரன் சிறையில் அடைக்கப்பட்டு ஒருவாரம் கழித்து இருதரப்பினர்களுக்கும் சமாதானம் பேசப்பட்டு வெளியில் விடப்பட்டான்.

எங்கே போனார்கள்? எங்கு தங்கினார்கள் என்பதைப் பற்றியெல்லாம் விசாரிக்கும் பக்குவம் அந்த பயமான சூழ்நிலையில் எனக்கு தோன்றாமல் போயிற்று.

பின் அந்த ஆர்த்தியை பக்கத்திலுள்ள அவர்களின் மாமா வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.

கொஞ்ச நாள் கழித்து வீரபத்ரனை ஊரில் சில இடங்களில் எங்கேயாவது கண்டால் நான் ஒதுங்கி போக ஆரம்பித்தேன். அவனது தந்தையின் பந்தல் செய்யும் தொழிலில் அவன் பிசியாகிவிட்டான். எங்கேயாவது கண்ணில்பட்டால் என்னைக்கண்டு ஒரு புன்சிரிப்பு சிரிப்பான். அவ்வளவுதான்.

சமீபத்தில் கூட நான் விடுமுறையில் ஊரில் இருந்தபொழுது ஒரு தெருவில் பந்தல் போட்டுக்கொண்டிருந்தவனை அழைத்துச் சென்று அவனுடைய நலம் - தொழில் நிலைமை எல்லாம் விசாரித்துச் சென்றேன்.அவனுக்கும் கல்யாணம் ஆயிடுச்சுங்க..நல்லபடியா இருக்கான்..

அந்த ஆர்த்தியும் ஒரே ஒரு தடவை அவர்கள் தெருவை கடந்துசெல்லும்போது பார்த்தேன். கல்யாணம் முடிந்து உடல் குண்டாகி முக அடையாளமே மாறிப்போய்விட்டாள். அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. இல்லை தெரியாதது போல் நடித்திருப்பாள் என்று நினைக்கின்றேன்.

எனக்கு என்ன தோன்றியது என்றால் அந்தச் ஆர்த்தியின் திருமணத்தில் நம்ம வீரபத்ரன் பந்தல் போட வந்தால் எப்படியிருந்திருக்கும். இதே சூழ்நிலை சினிமாவில் வந்திருந்தால் ஒரு சோக பாட்டை எடுத்து விட்டிருக்கலாம்.

இவன்
பந்தலையெல்லாம்
பக்குவமாய்தான் போட்டான்
ஆனால் தன்
காதலைத்தான்
கந்தலாக்கிவிட்டான்

அ..ஆ

school-love.jpg

என்னைச் சுற்றி நிகழ்ந்த முதல் காதல் என்னுடைய பள்ளியின் சீனியர் மாணவன் யூனுஸ்.

அவன் ஒரு பெண்ணிடம் காதல் கடிதம் கொடுக்கப்போய் தலைமையாசிரியரிடம் பிடிபட்டு பின்னர் அவனை தலைகீழாக கட்டிவைத்து அடித்தார்கள். அந்த யூனுஸ் அப்போது 8ம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தான்.

பின்னே என்னங்க ஆசிரியரின் மகளுக்கே காதல் கடிதம் கொடுத்தால் விடுவார்களா என்ன? பின்னு பின்னுன்னு பின்னிட்டாங்க.. பிறகு அவனை பள்ளியை விட்டே அனுப்பிவிட்டார்கள். அந்த யூனுஸின் நண்பனைக் கூட இங்கே சில இடங்களில் பார்த்தால் அதைப்பற்றி கேட்பேன்.

ஆசியரின் மகளை காதலித்தான்
ஆசி கிடைக்கவில்லை

தலைகீழாக அடித்ததில்
தரையில் சிதறியது காதல்

- ரசிகவ் ஞானியார்

இந்தக் குளத்தில் காதல் எறிந்தவர்கள் தலைப்பு வைரமுத்துவின் இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள் மூலம் தோன்றிற்று

இதுவரை என் வாழ்க்கையில் என்னைக் கடந்துசென்ற உண்மைக் காதல்கள் - காதல் தோல்விகள் - இனக்கவர்ச்சியில் காதலாகி ஓடிப்போன காதலர்கள் - காதல் தற்கொலைகள் என்று விதவிதமான காதல்கள் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். நீங்களும் ரசியுங்களேன் இந்தக் குளத்தில் காதல் எறிந்துவிட்டு சென்றவர்களை..

- ரசிகவ் ஞானியார்

வலைப்பதிவு அறிமுகம்

என்னைச்சுற்றி நடந்த காதல் நிகழ்வுகளையும் -

எழுதிய எழுதிக் கொடுத்த -
வாங்கிய வாங்க மறுத்த காதல் கவிதைகளையும்
பரிமாறிக்கொள்கிறேன்.

நிஜங்கள் சுடும்

- ரசிகவ் ஞானியார்