எனக்கு ஞாபகம் தெரிந்த அடுத்த காதல் ஜோடி வீரபத்ரன் - ஆர்த்தி
வீரபத்ரன் என்னுடைய பத்தாவது வகுப்பு பள்ளித்தோழன். தினமும் நான் - வீரபத்ரன் - பாலகுமார் - ராஜா என்று பள்ளி முடிந்ததும் ஒன்றாக சைக்கிளையும், விழிகளையும், தாவணித்தேவதைகளை பின்தொடர்ந்து உருட்டியபடி பேசிக்கொண்டே வந்து கொண்டிருப்போம்.
வீரபத்ரன் - விஜயகாந்தின் நிறத்தில் ஆறடி உயரத்தில் இருப்பான். அவனது தந்தை திருமண வீட்டிற்கு பந்தல் கட்டும் வேலை செய்து வருபவர்.
ராஜா - எனக்குத்தெரிந்து பாளையங்கோட்டையிலிருந்து எங்கள் ஊருக்கு படிக்க வந்த முதல் மாணவன். அவனது தந்தை அரசாங்க அலுவலகர்
பாலகுமார் - புளியங்குடி பக்கத்தில் இருந்து வந்து எங்கள் ஊரில் அவனது உறவினர் வீட்டின் மாடியில் தங்கிப் படிப்பவன். அந்த வீட்டின் எதிர்வீடுதான் ஆர்த்தியின் வீடு. அவளும் எங்கள் பள்ளியில்தான் படிக்கின்றாள்
தினமும் பள்ளி முடிந்து நடந்து வரும்பொழுது ஆர்த்தி தனது சக தோழிகளுடன் எங்களின் பேச்சுக்கள் எட்டும் தூரத்தில் நடந்து சென்று கொண்டிருப்பாள். எப்படித்தான் லவ் பத்திக்சோ தெரியாதுங்க..அப்பல்லாம் எனக்கு விவரம் தெரியாத வயசு..அட நம்புங்க..உண்மைதான்..
அடிக்கடி வீரபத்ரனும் ஆர்த்தியும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொள்வது, தூரத்தில் சென்ற பிறகு கைகாட்டிவிட்டு விடைபெறுவது, இதெல்லாம் காதல்தான்னு எனக்கு அன்னிக்கே தெரியாதுங்க..
ஆனால் பாலகுமாரனும், வீரபத்ரனும் ஒருவருக்கொருவர் எங்களை விட்டுவிட்டு ரகசியம் பேசிக்கொள்வார்கள். வீரபத்ரன் அடிக்கடி பாலகுமாரைப் பார்க்க அவன் தங்கியிருக்கும் வீட்டிற்குச் செல்வான். “ஏன்னா எதிர்வீட்டுலதானே அவனோட தேவதை தங்கியிருக்கு”
ராஜா கூட என்னிடம் சந்தேகமாய் கேட்பான். “ஞானி என்னடா வீரபத்ரனும் பாலகுமாரனும் ஏதோ இரகசியமா பேசிக்கிறாங்கடா..என்னன்னு தெரியல..”
ராஜா கொஞ்சம் உஷார் பார்ட்டி. கண்டுபிடித்து என்னிடம் சொல்லிவிட்டான். “டேய் ஞானி! வீரபத்ரனும் ஆர்த்தியும் லவ் பண்றாங்கடா..”
எனக்கு பயங்கர ஷாக். ராஜா என்னிடம் அந்த விசயத்தை சொன்ன பிறகு காதல் என்ன நிறம்..? எப்படியிருக்கும்..? அது வந்தால் என்ன ஆகும்..? எப்படி வருகிறது? என்பதை எல்லாம் 2 நாட்கள் தூக்கத்தை தொலைத்து அலசியிருக்கின்றேன்.
நெருங்கியவர்கள் மரணமடையும்பொழுது நமக்கும் மரணம் உண்டு என்று ஒரு பயம் வருமே அதுபோல நெருங்கிய நண்பனின் காதல் என்னையும் கிளர்ச்சியடையச்செய்தது மட்டுமின்றி காதல் பற்றிய முதல் அறிமுகத்தையும் தந்தது.
எனக்கு வீரபத்ரனிடம் கேட்பதற்கு தயக்கம். ஆகவே பாலகுமார் வீட்டிற்குத் தேடிச்சென்று விசயத்தை கேட்டேன். அவன் முதலில் பயத்தில் மறுத்தான் பின் உண்மையை உளறிவிட்டான்.
மறுநாள் வழக்கம்போல நாங்கள் பள்ளி முடிந்து வந்துகொண்டிருக்கின்றோம். எனக்கு அப்பொழுது வீரபத்ரனும் ஆர்த்தியும் மட்டுமே தனியாய்த் தெரிந்தார்கள். சினிமாவின் கதாநாயகர்கள் கதாநாயகிகள் எல்லாம் ஞாபகத்தில் வந்து போயினர்
காதலித்துப்பார்
பார்க்கும் படத்திலெல்லாம்
நீயே கதாநாயகன்
அவளே கதாநாயகி
அவள் தந்தையே வில்லன்
பத்தாம் வகுப்பு இறுதிப்பரிட்சை நெருங்கியது. தமிழ் பரிட்சை அன்று காலையில் பள்ளிக்கு வரும்பொழுதே அந்த அதிர்ச்சியான தகவல் வந்து சேர்ந்தது.ம் அதான்ங்க..நம்ம வீரபத்ரன் இருக்கான்ல..அவன் ஆர்த்தியை கூட்டிட்டு ஓடிப்போய்ட்டான்பா..எனக்கு ஆச்சரியமாகவும் பயமாகவும் இருந்தது. எந்த நம்பிக்கையில் அவர்கள் ஓடிப்போயினார்கள் என்ற ஆச்சரியமும் வீரபத்ரன் ஓடிப்போன செய்தியைப்பற்றி நம்மிடம் விசாரிப்பார்களோ என்ற பயமும் அதிகமாகியது.
நல்லவேளை அவர்கள் ஓடிப்போன செய்தியைப்பற்றி பாலகுமார் பள்ளி நிர்வாகத்திடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் சொல்லிவிட்டதால் நான் தப்பித்தேன்.
பிறகு இரண்டு நாள் கழித்து அவர்கள் தூத்துக்குடியில் அகப்பட்டுக்கொண்டார்கள்.
வீரபத்ரன் சிறையில் அடைக்கப்பட்டு ஒருவாரம் கழித்து இருதரப்பினர்களுக்கும் சமாதானம் பேசப்பட்டு வெளியில் விடப்பட்டான்.
எங்கே போனார்கள்? எங்கு தங்கினார்கள் என்பதைப் பற்றியெல்லாம் விசாரிக்கும் பக்குவம் அந்த பயமான சூழ்நிலையில் எனக்கு தோன்றாமல் போயிற்று.
பின் அந்த ஆர்த்தியை பக்கத்திலுள்ள அவர்களின் மாமா வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.
கொஞ்ச நாள் கழித்து வீரபத்ரனை ஊரில் சில இடங்களில் எங்கேயாவது கண்டால் நான் ஒதுங்கி போக ஆரம்பித்தேன். அவனது தந்தையின் பந்தல் செய்யும் தொழிலில் அவன் பிசியாகிவிட்டான். எங்கேயாவது கண்ணில்பட்டால் என்னைக்கண்டு ஒரு புன்சிரிப்பு சிரிப்பான். அவ்வளவுதான்.
சமீபத்தில் கூட நான் விடுமுறையில் ஊரில் இருந்தபொழுது ஒரு தெருவில் பந்தல் போட்டுக்கொண்டிருந்தவனை அழைத்துச் சென்று அவனுடைய நலம் - தொழில் நிலைமை எல்லாம் விசாரித்துச் சென்றேன்.அவனுக்கும் கல்யாணம் ஆயிடுச்சுங்க..நல்லபடியா இருக்கான்..
அந்த ஆர்த்தியும் ஒரே ஒரு தடவை அவர்கள் தெருவை கடந்துசெல்லும்போது பார்த்தேன். கல்யாணம் முடிந்து உடல் குண்டாகி முக அடையாளமே மாறிப்போய்விட்டாள். அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. இல்லை தெரியாதது போல் நடித்திருப்பாள் என்று நினைக்கின்றேன்.
எனக்கு என்ன தோன்றியது என்றால் அந்தச் ஆர்த்தியின் திருமணத்தில் நம்ம வீரபத்ரன் பந்தல் போட வந்தால் எப்படியிருந்திருக்கும். இதே சூழ்நிலை சினிமாவில் வந்திருந்தால் ஒரு சோக பாட்டை எடுத்து விட்டிருக்கலாம்.
இவன்
பந்தலையெல்லாம்
பக்குவமாய்தான் போட்டான்
ஆனால் தன்
காதலைத்தான்
கந்தலாக்கிவிட்டான்
- ரசிகவ் ஞானியார்